Samarvel Arulin Isai

Thiruvasagam

போற்றி என் வாழ்வே

Muthai Tharu Patthi Thirunagai

ஓம்

ComposerManickavasagar

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1 அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9 புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே .10
சிறந்த இதழ்களை உடைய தாமரைகள் மலரும் குளிர்ந்த சேற்றுடை வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! உயர்ந்த நந்திக் கொடியினை உடையாய், என்னை உடையவனே! எனது வாழ்விற்கு மூலப்பொருளான எம்பெருமானே! பொழுது விடிந்தது. நீ எழுந்தருளினால் நாங்கள் நினது அழகிய இரு திருவடிகளுக்கு ஒத்த மலர்களை அவற்றின் மேல் தூவி உன் சந்நிதியில் நின்று நின் திருமுகத்தில் எழுகின்ற  அருள்விளங்கும் அழகிய புன்சிரிப்பைப் பெற்று நின் திருவடிகளை வணங்குவோம். துயில் நீங்கித் திருப்பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக. 1 செங்கதிரோன் இந்திரன் திக்காகிய கீழ்த்திசை நெருங்கி விட்டான். இரவின் இருள் நீங்கி உதய ஒளி பரவிற்று. தாமரை போன்ற நினது திருமுகத்தின் அருளைப் போலக்  கதிரவன் மேலே எழுந்து வருகிறான். நினது கண்கள் போன்றனவும் , வாசனையும் உள்ள  தாமரை மலர்கள் விரியும்படி , அதன் பாங்கரில் திரளும் வரிசை வரிசையான வண்டுக் கூட்டங்கள்  ஒலித்து ரீங்காரம் செய்கின்றன. இவற்றைக் கருதுக. திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய  சிவபெருமானே! அருட்செல்வத்தைத் தர வருகின்ற இன்பமலையே! எல்லாப் பொருளும்      அலைபோல் தோன்றி அடங்குதற்குரிய பெருங்கடலே! துயில் நீங்கி எழுந்தருளுக ! 2 திருப்பெருந்துறையில் வீற்றிருக்குஞ் சிவபெருமானே, யாரும் அறிவதற்கு  அரிதானவனே, கருணையால் அடியாராகிய எங்களுக்கு எளிதாக வந்தருள்பவனே!  பொழுது புலர்வதை உணர்த்த அழகிய குயில்கள் கூவிவிட்டன. கோழிகளும் கூவின. பிற பறவை இனங்களும் ஒலித்து விட்டன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திர வெளிச்சங்கள்  மறைந்தன. உதயத்தின் ஒளி நிலத்தின்கண் வந்து தோன்றுகிறது. கடவுளே, துயில் நீங்கி எங்கள்பால் விருப்பத்தோடு வீரக் கழல் செறிந்த பிறவி அறுக்கும் உனது நல்ல திருவடிகள் இரண்டையும் காட்டி அருள்வாயாக. 3 விடியற்காலம் இறைவழிபாட்டுக்காக வந்தவர்களில் இனிய ஓசை இசைக்கும்  வீணையை உடையவர் ஒருபுறம் நிற்கிறார்கள்; யாழ் வாசிப்போர் இன்னொருபுறம்;  மந்திரங்களோடு, துதிப்பாடல்களையும் ஓதுவார்கள் ஒருபுறம்; நெருக்கிக் கட்டப்பட்ட      மலர்மாலைகளைக் கையில் ஏந்தியவர் ஒருபுறம்; தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர்  ஒருபுறம்; தலைமேல் கை குவித்தவர் ஒரு புறம்; திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எம் தலைவனே! தகுதியற்ற அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள்  செய்பவனே! இவர்கள் யாவருக்கும் அருள்புரியத் திருப்படுக்கை விட்டு எழுந்தருளுக !4 குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் அரசனே!  மனத்திற்கும், ஊகித்து அறிவதற்கும், எட்டாதவனே ! ஐம்பூதங்களிலும், மற்று எல்லாப்  பொருட்களிலும் நீ கலந்து நின்றாய் என்று அறிஞர்கள் கூறுவார்கள். நீ போக்கும் வரவும் இல்லாதவன் என்பார்கள். உன்பொருட்டு இசைப் பாடல்களைப் பாடுதலும் ஆடுதலும் செய்வதை அல்லாமல் உன்னைத் தாமாக நேரில் கண்டதாகக் கூறுபவர்களை நாம் கேட்டு அறியவில்லை. ஆயினும் அடியேங்கள் எதிரே தோன்றி, அருளி, எங்கள் குற்றங்களைத் தொலைத்துப், பேரருள் அளிக்கத் திருப்பள்ளி விட்டு எழுந்து அருளுக! 5 உமை மணவாளனே ! எம் தலைவனே ! கிண்ணம் போன்ற சிவப்பு நிறத் தாமரை  மலர்கள் விரியப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில்  வீற்றிருக்கின்ற சிவபெருமானே! விரிந்த மனத்தை ஒடுக்கி, பற்றற்ற நிலை நின்று  மெய்ப்பொருளாகிய உன்னை உணர்ந்த அன்பர்கள் போற்றிப் பாச நீக்கம் அடையப்பெற்றுப் பிறப்பின் பயனைப் பெற்று விட்டார்கள். அவர்கள் அனைவரும் மனித  இயற்கையில் மைபொருந்திய கண்களை உடைய மகளிர் மேல் அமையும் மானுடரது  இயல்பை உடையவராய் இல்லறத்தைத் துறவாது , அதனோடு கூடி நின்று உன்னை வணங்கி  நிற்கின்றார்கள். திருப்பள்ளி எழுந்தருளி வந்து இந்தப்பிறவியை நீக்கி எங்களை ஆட்கொள்ள அருள்செய்வாயாக..6 முழு முதற்பொருளாகிய இறைவனைக் கனியின் சுவை எனவும்; அமுதம் எனவும்; அறிய முடியாதது எனவும், அறிதற்கு எளிது எனவும் இவ்வாறு பலவாறு வாதித்துத்  தேவர்களும் அறியாநிலையில் இருப்பர். இந்நிலையில், வீடருளும் பரம் பொருளின் திருவடிவம் இதுவே எனவும், இத்திருவுருக் கொண்டு வந்த இவனே அப்பெருமான் என்றும்  நாங்கள் சொல்லும்படி எம்மை ஆட்கொண்டருளினாய் ! தேன் மிகுந்த சோலை சூழ்ந்த  திரு உத்தர கோச மங்கையில் உறைவோனே! திருப்பெருந்துறையுறைக் கோவே ! எங்களை  நீ ஏவல் கொள்ளும் முறை எதுவோ அதனைக் கேட்டு நடப்போம். எம் தலைவனே !  திருப்பள்ளி எழுந்தருளுக ! 7 கிடைத்தற்கரிய நிறைந்த அமுதமே! முற்பட்ட முதலும், நிலையும், முடிவும்  ஆனவனே! மும்மூர்த்திகளும் நின்னை அறிய வல்லவர் அல்லர் எனின், வேறு யார் உன்னை  அறிதல் கூடும்? பந்தின் தன்மை சார்ந்த திருக்கை விரலுடையவள் நின் திருவருட்சத்தி.  அன்பர்களுக்கு நீயும் அவளும் அருள் புரிவான் வேண்டி அவர்களுடைய பழைய குடில்கள்  தோறும் எழுந்தருளிய மேலானவனே! சிவந்த அனல்போலும் உள்ள உனது செம்மேனி  வடிவம் காட்டி அருளினாய் ! நீ திருப்பெருந்துறையில் தங்குகின்ற திருக்கோயிலையும்  காட்டினாய்! நீ ஆட்கொள்ளும் அருளாளனாய் வருதலையும் காட்டி, எங்கள்பால் வந்து ஆட்கொண்டவனே! நீ திருப்பள்ளி விட்டு எழுந்தருளுக! 8 வானுலகிலுள்ள விண்ணவர்களும் நெருங்க முடியாத மேலான பரம்பொருளே !  உனது தொண்டாற்றும் அடியவராகிய நாங்கள் இம் மண்ணுலகில் பேரின்பத்தோடு  வாழும்படியாக எழுந்தருளி வந்தாய் ! எங்களை வாழ்விக்கச் செய்தவனே ! வளம் பொருந்திய  திருபெருந்துறையை உடையவனே ! பரம்பரையாக நின்னை வழுத்தும் அடியார்கள்  கண்ணில் நின்று அல்லது அகத்தே நின்று மகிழ்ச்சி தருகிற தேன் போலும் இனியவனே !  விண்ணவர்க்குத் திருப்பாற்கடலின் அமுதம் போல்பவனே ! கரும்பு போல்பவனே ! உன்னை  விரும்பும் அடியவர்கள் நினைவிலுள்ளோனே ! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே !  எமது தலைவனே ! திருப்பள்ளி எழுந்தருளுக. 9 கிடைத்தற்கரிய அமுதமே! இப்பூவுலகம் சிவபெருமான் உயிர்களுக்கு வீடருளி  ஆட்கொள்கின்ற வகையுடையதாக விளங்குகிறது. இதனை அறிந்த திருமாலாகிய பெரியோனும்  மலரில் உறைகின்ற நான்முகனும், தாங்கள் பூமியில் பிறந்து இறைவனால் ஆட்கொள்ளப் பெறாமல்  வாழ்நாளை வீணாகப் போக்குகின்றோமே என்று விருப்பமுற்று ஆசைப்படும்படியாகவும், நீயும்,  பொய்யாத நின் திருவருட்சத்தியும் ஞாலத்தில் வந்தருளி எங்களை உய்யக் கொண்டருள  வல்லவனே! திருப்பெருந்துறை உறைவானே ! இறைவனே ! திருப்பள்ளி விட்டு எழுந்தருளுக! 10
Scroll to Top